மாலையில் வாசலில் விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்



எந்த நேரத்தில் வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும்

மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். அஷ்ட்ட லக்ஷ்மிகளும் வீட்டில் வாசம் செய்வார்கள் மேலும் இதனால்  குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம். 

வீட்டில் விளக்கேற்றுவதில் பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு  எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். 
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. மஞ்சள் அல்லது கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.  மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.  தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.
எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம்  பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. 
சுவாமிநாதன் ஐயர், ஸ்ரீரங்கம்

1 comment:

  1. ஐயா வீட்டில் அணைய தீபம் ஏற்றலாமா

    ReplyDelete

Powered by Blogger.